இந்தியா

கொலை வழக்கில் தப்பிக்க பாஜகவில் சேர முயற்சிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ: இது கர்நாடகா கூத்து!

கொலை வழக்கில் தப்பிக்க பாஜகவில் சேர முயற்சிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ: இது கர்நாடகா கூத்து!

sharpana

கர்நாடகாவில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் தன் மீதான கொலை வழக்கில் இருந்து தப்பிக்க, பா.ஜ.க-வில் சேர முயற்சி செய்த கூத்து அரங்கேறியிருக்கிறது.

 தார்வாட் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி. இவர் இதே மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் யோகேஷ் கவுடாவை 2016ல் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சர்ச்சைக்குரிய இந்தக் கொலை வழக்கில் நேற்று முன்தினம் வினய், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

கைதுக்கு முன்னதாக, கொலை வழக்கில் தான் எப்படியும் சிக்கிவிடுவோம் எனக் கருதி, அதிலிருந்து தப்பிக்க பல்வேறு வழிகளை தேடியுள்ளார் வினய். அதில் ஒன்றுதான் கட்சி விட்டு கட்சி தாவுதல்.

பா.ஜ.க உறுப்பினரை கொலை செய்த குற்றச்சாட்டில் சிக்கக் கூடாது என்பதற்காக பா.ஜ.க-விலேயே வினய் சேர முயன்றதுதான் இதில் ஹைலைட். இதற்கு சில பாஜக தலைவர்களும் ஆதரவு தெரிவித்து மேலிட தலைமையை சந்திக்க வினய்யை அழைத்தும் சென்றுள்ளனர். இந்த ஆண்டு அக்டோபரில், வினய் குல்கர்னி மற்றும் சிபி யோகீஷ்வர் ஆகியோர் பல பா.ஜ.க மேலிட தலைவர்களை சந்திக்க டெல்லி, ராஜஸ்தான் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர். 

 மேலும், மேலிட தலைவர்களிடம் சி.பி.ஐ இந்த வழக்கில் இருந்து தனது பெயரை நீக்கிவிட்டால் கட்சியில் இணைய தயார் என டிமாண்டும் வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. 

கே.எஸ் ஈஸ்வரப்பா

 இந்த நிகழ்வுகளை கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா பொதுவெளியில் போட்டு உடைத்துள்ளார். அதில், "நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். வினய் குல்கர்னியை கட்சிக்குள் கொண்டுவர பா.ஜ.க ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. கட்சியில் சேரலாம் என்ற நம்பிக்கையில் பல பா.ஜ.க தலைவர்களை வினய் சந்தித்தார். ஆனால், தேசிய தலைவர்கள் அவரை நம்பவில்லை, அவரது திட்டத்தை நிராகரித்தனர். சி.பி.ஐ விசாரணையில் குற்றமற்றவர் என நிரூபித்தால், இதனை பரிசீலிப்பதாக கூறி அவர்கள் வினய்யை அனுப்பிவிட்டனர்" எனக் கூறியுள்ளார். 

ஹுப்பள்ளி-தார்வாட் மத்திய சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் ஷெட்டார் மற்றும் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி உள்ளிட்ட பல பாஜக தலைவர்களுக்கு மறைமுக பாதுகாவலராகவும், பினாமியாகவும் இருப்பதாக வினய் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. அவர்கள்தான் பா.ஜ.க-வில் வினய்யை சேர வைக்க முயற்சித்தனர். இதற்கு மற்ற பா.ஜ.க.-வினர் எதிர்ப்பு தெரிவிக்க, கலகம் ஏற்பட்டுள்ளது.