கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி பகுதியில் 1943ஆம் ஆண்டு பிறந்தவர் உம்மன்சாண்டி. இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி மாணவர்கள் அணியில் (KSU) இணைந்து பணியாற்றி தனது அரசியல் வாழ்க்கையை துவங்கினார். மாணவர் அணியில் செயல்பட்டு படிப்படியாக உயர் பதவிகளுக்கு வந்த இவர், 1970-ம் ஆண்டு முதல் முறையாக கேரள சட்டமன்ற தேர்தலில் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிகண்டார்.
அந்த புதுப்பள்ளி தொகுதியில், 1970 முதல் 2021 வரை 12 முறை தொடர்ந்து எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் உம்மன்சாண்டி. இந்தியாவில் ஒரே தொகுதியில் அதிக ஆண்டுகள் (53) சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் இவர்தான். உம்மன்சாண்டி, தான் கட்டிய வீட்டுக்கும் தன் தொகுதியான புதுப்பள்ளி பெயரையே சூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு முறை கேரளாவின் முதல்வராகவும் இருந்திருக்கிறார் உம்மன்சாண்டி. அந்தவகையில், இவர் 2004 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும் 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலும் கேரள மக்களால் தேர்வு செய்யப்பட்டு கேரள முதல்வராக பணியாற்றினார். கேரள அரசியலில் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் நம்பிக்கை பெற்ற அரசியல் தலைவராக இருந்து வந்தார்.
உம்மன்சாண்டி, கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும், அரசியலில் முழுநேரமும் செயல்பட்டு மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் புற்றுநோய் தீவிரமடைந்ததால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
80 வயதான இவரது உடல் தற்போது பெங்களூர் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருவதால் அங்கு முகாமிட்டுள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட தேசிய தலைவர்கள் மற்றும் கேரள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு அங்கே அஞ்சலி செலுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் சேர்ந்து முடிவெடுத்த பிறகு, இன்று மதியம் அவரது உடல் கேரளாவுக்கு கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.
உம்மன்சாண்டியின் மறைவு, கேரள மக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கல் செய்தியில் “உம்மன்சாண்டி மிக சிறந்த நிர்வாகி. மக்களுடன் நெருங்கி வாழ்ந்தவர். அவரும் நானும் ஒரே ஆண்டில்தான் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டோம்” என்றுள்ளார்.