குமாரசாமி, சுமலதா ட்விட்டர்
இந்தியா

மாண்டியாவில் களமிறக்கப்பட்ட குமாரசாமி; பாஜக கைவிட்டதால் கடும் அதிருப்தியில் சுயேட்சை எம்.பி சுமலதா!

கர்நாடக மாநிலம் மாண்டியா மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடுகிறார்.

Prakash J

நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. அந்த வகையில், கர்நாடகாவில் உள்ள மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாகத் (ஏப்.26 மற்றும் மே 7) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று அரியாசனத்தில் அமர்ந்துள்ளது. தற்போது நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் அதை வீழ்த்தும்வண்ணம் பாஜகவும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. அந்த வகையில், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு சிக்கபள்ளாப்பூர், மாண்டியா, ஹாசன் என 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் மாண்டியா தொகுதியில் தேவகவுடாவின் மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி களமிறங்குகிறார்.

Kumarasamy

ஹாசன் தொகுதியில் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வெல் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுகிறார். சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் மல்லேஷ் பாபு களமிறங்குகிறார். மாண்டியா தொகுதியில் குமாரசாமி களமிறங்க இருப்பதால், கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 தேர்தலில் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் சுயேட்சை வேட்பாளரான சுமலதாவிடம் தோல்வியுற்றார். சுயேச்சை எம்பியான சுமலதா தற்போது பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். மேலும் அவர் மீண்டும் மாண்டியாவில் போட்டியிட முடிவுசெய்த நிலையில் அந்த தொகுதி குமாரசாமிக்கு பாஜக சீட் வழங்கி இருப்பதால், சுமலதாவும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சுமலதா மீண்டும் அங்கு போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: தொடரும் விரிசல்: இந்தியாவுக்கு ஆதரவு.. திடீர் பல்டி அடித்த மாலத்தீவு அதிபர்.. என்ன காரணம்?

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ், மாண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றிருந்தார். இதில் ஒரு முறை மஜத சார்பிலும், 2 முறை காங்கிரஸ் சார்பிலும் அவர் எம்பியாக தேர்வானார். அவரது மறைவுக்குப் பிறகு மனைவி சுமலதா காங்கிரஸ் சார்பில் மாண்டியாவில் களமிறங்க விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அவருக்கு சீட் வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து பாஜக மேலிடம் சுமலதாவிடம் தங்களது கட்சியில் இணையுமாறு வலியுறுத்தியது. ஆனால் அவர் பாஜகவில் சேராமல், தொடர்ந்து அக்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மக்களவை தேர்தல்: வேட்பாளர்களைத் தொடர்ந்து கட்சிகளும் விலகல்.. 3 மாநிலங்களில் பாஜக தனித்துப் போட்டி?