இந்தியா

முன்னெச்சரிக்கை நடவடிக்கை... மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா கைது

webteam

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து இன்று ரத்து செய்யப்பட்டது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு சில கட்சிகள் ஆதரவும், சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. 

இந்தியாவின் பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காஷ்மீர் மீதான இந்த அறிவிப்பு அங்கு பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தலாம் என்று வெளியான தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.