இந்தியா

தன் பிறந்த நாளன்று விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த யுவராஜ் சிங்!

தன் பிறந்த நாளன்று விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த யுவராஜ் சிங்!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் அசத்தலான முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். கங்குலி தலைமையிலான இந்திய அணியில் உதித்த இளம் வீரர். 2011 உலக கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல ஸ்டார் பிளேயராக செயல்பட்டவர். இன்று தனது 39வது பிறந்த  நாளை கொண்டாடி வருகிறார். 

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசயிகளின் போராட்டம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் அவர். “நமக்கு விருப்பமான அல்லது பிடித்தவற்றை பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பாக  அமைகிறது பிறந்த நாள். இந்த முறை வழக்கமான பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மாறாக விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் விரைவாக சுமூக முடிவு எட்டப்பட வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அது தான்  எனது விருப்பமும் கூட. 

விவசாயிகள் நம் தேசத்தின் உயிரோட்டம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எந்தவொரு பிரச்சனையும் பேசியே தீர்க்க முடியும் என்பது என் நம்பிக்கை. 

ஒரு இந்தியனாக பெருமை அடைகிறேன். அதே நேரத்தில் எனது அப்பா யோக்ராஜ் சிங்கின் கருத்துகளால் நான் வருத்தமும், மன வேதனையும் அடைந்துள்ளேன். நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் அவரது கருத்துகளோடு எனக்கு துளி அளவு கூட உடன்பாடு இல்லை. அவை அனைத்தும் அவரது சொந்த கருத்துகள். 

அதே நேரத்தில் கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டு விலகவில்லை என்பதை எல்லோரும் கவனத்தில் கொண்டு அதன்படி பாதுகாப்போடு இருந்து அதனை வீழ்த்துவோம்.

ஜெய் ஜாவான், ஜெய் கிசான் (விவசாயிகள்), ஜெய் ஹிந்த்” என யுவராஜ் தெரிவித்துள்ளார்.