இந்தியா

இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’  - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்

இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’  - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்

webteam

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை எதிர்த்து முன்னாள் ஆட்சியர் சசிகாந்த் செந்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

கர்நாடக மாநிலத்திலுள்ள தக்ஷ்ன கன்னடா மாவட்டத்தில் ஆட்சியராக பணி செய்தவர் சசிகாந்த் செந்திலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்த சசி மீண்டும் இப்போது ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அதாவது குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியது குறித்தும் அதற்கு எதிராகவும் தனது கருத்துகளை அமித் ஷாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம் இப்போது விவாதமாகி உள்ளது.

அவர் எழுதி உள்ள கடிதத்தில், “பல தடுப்பு மையங்களை அமைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். சில மாதங்கள் முன்பு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கும் சட்டப் பிரிவான 370 ஐ மத்திய அரசு திரும்ப பெற்றது. அதனை எதிர்த்து சசிகாந்த் தனது மாவட்ட ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தார். “நவீன இந்திய வரலாற்றில் இருண்ட நாளாக இதைக் குறிக்க வேண்டும்” என்று அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். அப்போது நாடு முழுவதும் இவரது ராஜினாமா அதிர்வலைகளை எழுப்பியது. அதன் மூலம் இவரது பெயர் நாடு முழுவதும் பிரபலமானது. 

இந்நிலையில்தான் சசிகாந்த் செந்தில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து கடுமையான சொற்களை பயன்படுத்தி இவர் மீண்டும் அமித் ஷாவுக்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார். நேற்று மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமித்ஷா தாக்கல் செய்தார். அதன் பிறகு மசோதா நிறைவேறியது. அதற்கான விவாதம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனை ஆதரித்தும் சில கட்சிகள் எதிர்த்தும் கருத்து கூறி வருகின்றன. இதனிடையேதான் சசிகாந்த் கடிதம் எழுதி உள்ளார். 

மேலும் இவர் இதை ‘வகுப்புவாத மசோதா’ என்றும் என்.ஆர்.சி மசோதாவுக்கு எதிராக ஒரு ஒத்துழையாமை நடத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். என்.ஆர்.சி. சட்டத்திருத்த மசோதாவை ஏற்க மாட்டேன் என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  “எனது குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை” சமர்ப்பிக்க மாட்டேன் என்றும், இதனை கீழ்ப்படியாமை என நினைத்தால் “இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்வேன்” என்றும் செந்தில் கூறியுள்ளார்.

“எனது குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காததன் மூலம் என்.ஆர்.சி. சட்டத்திருத்தப்படி குடியுரிமையை ஏற்க மறுக்கும் செயல்முறையை நான் ஏற்கமாட்டேன். அதற்காக எனது கீழ்ப்படியாமைக்கு எதிராக இந்தியா அரசு எடுக்கும் நடவடிக்கையை ஏற்க நான் தயாராகவே இருக்கிறேன். என்னை ஒரு குடிமகன் அல்லாதவராக அறிவிக்க அரசு முடிவு செய்தால், நீங்கள் நாடு முழுவதும் கட்டப்போகும் பல தடுப்பு மையங்களை நிரப்பி நான் மகிழ்ச்சியடைவேன். என் சக மனிதர்கள் மீது வகுப்புவாத விவரக்குறிப்பு மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளை ஒரு ஊமை பார்வையாளராக ஒதுங்கி நின்று பார்ப்பதைவிட அதற்காக நான் வழங்கப்படும் சிறைவாசத்தை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வேன், ”என்றும் செந்தில் கூறினார்.