கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் கொரோனா சூழலில் சிறப்பாக பொது சுகாதாரத்துறை பணிகளை மேற்கொண்டமைக்காக 2021 ஆண்டுக்கான ஐரோப்பிய பல்கலைக்கழக ஓப்பன் சொசைட்டி விருத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்தபோது முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மாநிலம் கேரளாதான். அதிலிருந்து, கொரோனா தடுப்பு பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டார், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர். அதற்காக, புகழ்மிக்க வோக் அட்டைப்படத்தில் இடம் பிடித்தது, ஐ.நாவின் பாராட்டு என புகழ்பெற்றார்.
சமீபத்தில், பினராயி விஜயன் தலைமையிலான அரசு இரண்டாம் முறையாக பதவியேற்றபோது, ஷைலஜா டீச்சருக்கு மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் பணி கொடுக்கவில்லை என்று மக்களின் விமர்சனத்திற்கு ஆளானார் பினராயி விஜயன். அந்தளவிற்கு தனது சுறுசுறுப்பான அறிவியல்பூர்வமான செயல்பாடுகளால் மக்களின் பாசத்தை வென்றிருந்தார் ஷைலஜா டீச்சர்.
இந்நிலையில், ஷைலஜா டீச்சர் கொரோனா தொற்று பரவலின்போது உறுதியான தலைமை மற்றும் சமூக அடிப்படையிலான பொது சுகாதாரப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக, 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழக ஓப்பன் சொசைட்டி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு அம்மாநில முன்னாள் நிதியமைச்சர் அமைச்சர் தாமஸ் ஐசக் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். தற்போது, கேரள அமைச்சரவையில் கொறடாவாக இருக்கிறார் ஷைலஜா டீச்சர்.