இந்தியா

குஜராத்தின் முன்னாள் முதல்வர்..6 முறை எம்.எல்.ஏ - கேஷுபாய் படேல் காலமானார் .!

குஜராத்தின் முன்னாள் முதல்வர்..6 முறை எம்.எல்.ஏ - கேஷுபாய் படேல் காலமானார் .!

webteam

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கேஷுபாய் படேல் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 92. நேற்று காலை கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். முன்னாள் முதல்வர் கேஷுபாயின் உயிரிழப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கேஷுபாய் படேல் பாஜகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். குஜராத் சட்டமன்ற உறுப்பினராக ஆறு முறை பதவி வகித்தவர். குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக முதலமைச்சராக 1995 மற்றும் 1998 முதல் 2001 முடிய பதவியில் இருந்தவர்.

2012-இல் பாரதிய ஜனதா கட்சியை விட்டு வெளியேறி குஜராத் பரிவர்த்தன் கட்சியை நிறுவினார். விஸ்வதர் சட்டமன்ற தொகுதியிலிருந்து வெற்றி பெற்றாலும், 2014-இல் நோய் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தவர்.

1995-இல் குஜராத் மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கேசுபாய் படேல், சங்கர்சிங் வகேலா தலைமையில் 47 சட்டமன்ற உறுப்பினர்கள், கேசுபாய் படேலுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டதால் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

இதனால் சங்கர்சிங் வகேலாவின் ஆதரவு பெற்ற சுரேஷ் மேத்தா முதல்வராகப் பதவி ஏற்றார். 1998 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கேசுபாய் படேல், பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-இல் கேசுபாய் படேல் முதல்வர் பதவியை துறந்ததால், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வரானார்.