கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ‘படையப்பா’ யானையின் அட்டகாசம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறுவாசிகளுக்கு ‘படையப்பா’ என்றழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை மிகவும் பரிச்சயம். அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி பொது இடங்களில் உலா வரும் ‘படையப்பா’ யானை, பொதுமக்களை அச்சுறுத்தாமல் சாலையோர கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் திண்பண்டங்களை தின்றுவிட்டு செல்வது அங்கிருப்போருக்கு தெரிந்த சங்கதிதான்.
இப்படி அமைதியாக காணும் ‘படையப்பா’ யானை சமீபகாலமாக ஆவேசமாக உலா வரத் துவங்கியுள்ளது. அந்தவகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘படையப்பா’ யானை, கடைகளை சேதப்படுத்தியது. பின்னர் அதன் ஆவேசம் சற்று அடங்கியது. ஆனால் இப்போது அது மீண்டும் ஆவேசத்தை காட்டத் தொடங்கியுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் மக்களே இருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக கேரளாவின் மூணாறில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மூணாறில் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் உலா வந்து கொண்டிருந்த ‘படையப்பா’ யானையை பார்த்து கூச்சலிட்டும், வாகனத்தின் மூலம் ஒலி எழுப்பியும் அதனை கோபமடையச் செய்தனர்.
இதனால் அமைதியிழந்த ‘படையப்பா’ யானை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை ஆவேசத்தில் தூக்கி எறிந்து சேதப்படுத்தியது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதன்பின்பு ‘படையப்பா’ யானை அமைதியாக வனப்பகுதிக்கு கடந்து சென்றது. தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் அங்கிருந்த சில சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், வனத்திற்குள் இருந்து‘படையப்பா’ யானை மீண்டும் வெளிவராத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.