குஜராத் பல்கலைக்கழகம் pt web
இந்தியா

குஜராத்: தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய கும்பல்!

குஜராத் பல்கலைக்கழகத்தில் விடுதி அறையில் தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Angeshwar G

குஜராத் பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இலங்கை, சிரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்துவருகின்றனர். சனிக்கிழமை இரவு ரம்ஜான் பண்டிகையையொட்டி, வெளிநாட்டு மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டபோது அடையாளம் தெரியாத கும்பல் திடீரென அங்கு வந்துள்ளது. அப்போது, மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், மதம் தொடர்பான முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அடையாளம் தெரியாத கும்பல் மாணவர்கள் மீதும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

காவல்துறையினரும் தங்களது எக்ஸ் தளத்தில் தாக்குதலை உறுதிப்படுத்தி பதிவிட்டுள்ளனர். “குஜராத் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை இரவு, அடையாளம் தெரியாத நபர்களால் வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதில், சிலர் விடுதியின் மீது கற்களை வீசி கோஷம் எழுப்புவதையும் பார்க்க முடிகிறது.

ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “அறைகளுக்குள்ளும் அவர்கள் எங்களைத் தாக்கினர். எங்களது மடிக்கணினிகள், தொலைபேசிகள் மற்றும் பைக்குகளை சேதப்படுத்தினர்” என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் 5 மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக குற்றப்பிரிவு காவல்துறையினர் அடங்கிய 4 குழுக்கள், உள்ளூர் காவல்துறையினர் அடங்கிய 5 குழுக்கள் என ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அஹமதாபாத் கமிஷ்னர் ஜிஎஸ் மல்லிக் இதுகுறித்து கூறுகையில், “வெளிநாட்டு மாணவர்கள் சுமார் 300பேர் படிக்கும் குஜராத் பல்கலைக்கழகத்தில், 75 மாணவர்கள் A ப்ளாக் விடுதியில் தங்கியுள்ளனர். நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த 20 முதல் 25 பேர் கொண்ட கும்பல் இங்கு ஏன் தொழுகை செய்கிறீர்கள், மசூதியில் செய்ய வேண்டியது தானே என கேட்டுள்ளனர்.

இதனை அடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட கும்பல், கற்களை வீசியும் மாணவர்களது அறைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஹைதராபாத் எம்பியும் AIMIM கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இது அவமானகரமான செயல். இஸ்லாமியர்கள் தங்களது மதவழிபாட்டில் ஈடுபடும்போது மட்டும்தான் உங்களது பக்தியும் மத முழக்கங்களும் வெளிப்படும். இஸ்லாமியர்களை பார்த்த மாத்திரத்தில் உங்களுக்கு அளவுக்கு அதிகமாக கோவம் வருகிறது. இது வெகுஜன தீவிரமயமாக்கல் இல்லாமல் வேறு என்ன? இது அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம். இவ்விஷயத்தில் அவர்கள் தலையிடுவார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குறிப்பிட்டு, “உள்நாட்டில் இஸ்லாமிய வெறுப்பு என்பது இந்தியாவின் நல்லெண்ணத்தை அழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சாங்வி, குஜராத் காவல்துறையின் தலைமை இயக்குநர் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையின் இணை ஆணையர் போன்ற மூத்த அதிகாரியுடன் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.