இந்தியா

நி‌ரவ் மோடியை பிடிக்க என்ன நடவடிக்கை? ‌ ‌-‌ வெளியுறவுத் துறை செயலாளர் பதில்

webteam

வ‌ங்கிக் கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் ‌நிரவ் மோடியை லண்டனிலிருந்து இந்தியாவுக்கு மீட்டுக்கொண்டு வரும் நடவடிக்கைகள் எடு‌க்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை செயலாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

லண்டனில் எவ்வித தடையு‌மின்றி நிரவ் மோடி உலாவி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் ரவீஷ் குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிரவ் மோடியை இந்தியாவுக்கு அனு‌ப்பக் கோரி தாங்கள் விடுத்த கோரிக்கை ‌‌இங்கிலாந்து அரசின் பரிசீலனையிலிருந்து வருவதாகவும் ரவீஷ் குமார் கூறினார். 

இதற்கிடையில் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழும் நிரவ் மோடியை இந்தியாவினால் பிடிக்க முடியாதது ‌ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. வ‌ங்கிகளில் மோசடி செய்பவர்களை பாதுகாக்கும் ஒரு நிறுவனமாகவே மத்திய அரசு மாறிவிட்டதாக காங்கி‌ரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா குற்றஞ்சாட்டியிருந்தார்‌‌.

முன்னதாக, மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நிரவ் மோடி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

நிரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. ஆனால், இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நிரவ் மோடி, தனது இடத்தை அடிக்கடி மாற்றி வருவதாக கூறப்படுகிறது.  நிரவ் மோடியை கைது‌ செய்ய மத்திய அரசு இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோ‌ட்டீஸ் பிறப்பித்து‌ள்ளது.

இந்நிலையில் லண்டனுக்கு ‌தப்பிச் சென்ற நிரவ் மோடி, அங்கிருந்த‌படி மீண்டும் வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‌இங்கிலாந்தி‌ன் டெலிகிராப் பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது.