மகாராஷ்டிர மாநிலம், கடலோரத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய ரத்னகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புக்காக தினமும் 50 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டிய நிலை, சமூக ஆர்வலர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தக் கடலோர மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் நிசார்கா புயலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. பல நாட்கள் கடந்த பின்பும், நிலைமை சீராகவில்லை.
இணைய வசதிக்காக தினமும் 200 மாணவர்கள் 50 கி. மீ தூரம் பயணிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய மாணவர்களின் புகாரை அடுத்து, ரத்னகிரி மாவட்ட ஆட்சியருக்கும் செல்ஃபோன் நிறுவனத்திற்கும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் பிரியங்க் கானுன்கோ விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
"குழந்தைகளின் மிக முக்கியமான கல்விப் பிரச்னை என்பதால், மாவட்ட நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தோம். தற்போது இந்தப் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து சீர்செய்துவருகிறார்கள் " என்றார் கானுன்கோ.