உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவுத் திட்டத்தில் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள வெறும் உப்பு வைக்கப்பட்ட தகவலை வெளி கொண்டு வந்த பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாப்பூரிலுள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவுத் திட்டத்தில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள வெறும் உப்பு மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியை பத்திரிகையாளர் பிரவீன் ஜெய்ஷ்வால் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டார். இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன.
இந்நிலையில் இந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர் பிரவீன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கான முதல் தகவல் அறிக்கையில், “பத்திரிகையாளர் மற்றும் அந்த கிராமத்தின் தலைவர் ஆகிய இருவரும் சேர்ந்து அரசு மீது கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர். மேலும் அவரின் வீடியோ அரசு மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் 1.5லட்சம் பள்ளிகளில் பயிலும் ஒரு கோடிக்கும் மேலான மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். மதிய உணவுத் திட்டத்தின்படி ஒரு மாணவருக்கு ஒருநாளைக்கு 12 கலோரி புரதம் உட்பட 450 கலோரிகள் சத்து கொண்ட உணவு அளிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.