ஐபிஎல் போட்டியில் சென்னை - மும்பை அணி ரசிகர்கள் எப்படி பரம எதிரி போல் சண்டையிடுவரோ அதேபோல் கால்பந்தில் மோகன் பகான் - கிழக்கு பெங்கால் அணி ரசிகர்கள். எனினும், பெண் பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இன்று இவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
தூரந்த் போப்பைக்கான கால்பந்து போட்டி நேற்று மோகன் பாகன் மற்றும் கிழங்கு பெங்கால் அணிகளுக்கு இடையே கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் நடைபெற இருந்தது. இதைக்காண ஏராளமான ரசிகர்கள் குவிந்த நிலையில், ரசிகர்கள் சிலர் மைதானத்திற்கு அருகே பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு அணியை சேர்ந்த ரசிகர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினர் அவர்களை கலைக்க முயன்ற நிலையில், ரசிகர்கள் கூட்டம் நேரம் செல்ல செல்ல பல மடங்காக அதிகரித்தது. ‘மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பயிற்சி மருத்துவரின் கொலைக்கு காரணமானவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் காரணமாக மோகன் பாகன் மற்றும் கிழங்கு பெங்கால் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து மோகன் பகான் கால்பந்து அணியின் கேப்டன் சுபாசிஷ் போஸ், தனது மனைவியுடன் போராட்டத்தில் கலந்துகொண்டார். மழையை பொருட்படுத்தாமல் கால்பந்து ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு அணிகளின் கொடி மற்றும் தேசிய கொடியை உயர்த்திப் பிடித்து முழக்கங்களை எழுப்பினர்.
தேசிய கீதத்தை பாடி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தினர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் சால்ட்லேக் மைதானம் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிய காவல்துறையினர், பின்னர் அவர்களை விடுவித்தனர்.