ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு அரசியலில் பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ள கால்நடைத் தீவன ஊழல் வழக்கு கடந்து வந்த பாதை...
1990 முதல் 1995 வரையிலான காலத்தில் பீகாரில் லாலு பிரசாத் முதலமைச்சராக இருந்த போது கால்நடைக்கு தீவனம் வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. 1996-ம் ஆண்டு ஜனவரியில் கால்நடைத்துறை துணை ஆணையர் அமித் கார்ரே நடத்திய சோதனையிலேயே இந்த முறைகேடு தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி 1996-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த ஊழல் தொடர்பாக மொத்தம் 63 வழக்குகளை பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.
அதில் சாய்பாசா, தியோஹர் மாவட்டங்களின் அரசுக் கருவூலத்தில் முறைகேடு செய்தது உள்ளிட்ட 5 வழக்குகள் லாலு பிரசாத் மீது மட்டும் பதியப்பட்டன. இதில் சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் 2013-ம் ஆண்டு லாலுவை குற்றவாளி என அறிவித்தது. 5 ஆண்டு சிறை தண்டனையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதனால், மக்களவை உறுப்பினர் பதவியை அவர் இழக்க நேர்ந்தது. தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மற்ற 4 வழக்குகளின் விசாரணை தொடர்ந்துகொண்டே இருந்தன. அதில், 1991 முதல் 1994 வரை தியோஹர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.