இந்தியா

வெள்ளத்தில் மிதக்கும் அசாம் : காண்டாமிருகம் உள்பட 76 உயிரினங்கள் உயிரிழப்பு

வெள்ளத்தில் மிதக்கும் அசாம் : காண்டாமிருகம் உள்பட 76 உயிரினங்கள் உயிரிழப்பு

jagadeesh

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கனமழை காரணமாக அங்கு கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் புகழ்ப்பெற்ற காசிரங்கா தேசியப் பூங்காவில் ஏறக்குறைய 76 வன உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அசாம் மாநிலத்தில் பெய்துவரும் மிக கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் இதுவரை 30 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 48 லட்சம் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சிரமத்தை சந்தித்துள்ளனர். 4,500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. வெள்ளத்தால் இதுவரை 68 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா உலகின் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் மிகப்பெரிய புகலிடமாக விளங்குகிறது. இந்நிலையில் அசாமில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரம்மபுத்ரா உள்ளிட்ட 13 நதிகள் மற்றும் அவற்றின் துணை நதிகளில் அபாய அளவுக்கு மேல் வெள்ளம் பாய்கிறது.

சுமார் 450 சதுர கி.மீ. பரப்பளவுள்ள காசிரங்கா தேசியப் பூங்காவின் 90 சதவீதப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் 5 காண்டா மிருகங்கள் உட்பட 76 காட்டு விலங்குகள் உயிரிழந்துவிட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 170விலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.