கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உச்சநீதிமன்ற நீதிபதி சினிமாப் பாடல் ஒன்றைப்பாடி மரியாதை செய்தார்.
பாலிவுட் பாடகர் மோஹித் சவுகான் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம், வழக்கறிஞர்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நீதிபதி கே.எம்.ஜோசப் பாடிய பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவர் ‘அமரம்’ என்ற மலையாளப்படத்தில் இடம்பெற்ற ‘மதுபான் குஷ்பூ டெடா ஹாய்’ என்ற பாடலை வெள்ள பாதிப்பின்போது மக்களுக்காக உதவிய மீனவர்களுக்காக பாடினார்.
அத்துடன் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது முதலில் பொறுப்புடன் களத்தில் இறங்கியவர்கள் மீனவர்கள் தான் என்று தெரிவித்தார். மீனவர்களை புகழ்ந்து பேசிய அவர், “மீனவர்கள் தங்கள் படகுகளுடன் களத்திற்கு வந்தனர். பல உயிர்களை காப்பாற்றினர். இது அவர்களின் நெஞ்சார்ந்த நல்லெண்ணத்தை காண்பிக்கிறது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், கேரளாவில் ஏற்பட்ட பேரழிவு சகோதரத்துவம், மதச்சார்பின்மை, சாதி மற்றும் இனச்சார்ப்பு இன்மை ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அத்துடன் “நாம் இணைந்து நின்றால், தோளோடு தோள் கோர்த்தால், கையோடு கை சேர்த்தால், பேரழிவிலும் வழியை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.
தான் பாடிய பாடல் குறித்து பேசிய அவர், அதற்கு காரணம் நீதிபதி குரியன் தான் என தெரிவித்தார். “ஒருநாள் நீதிபதி குரியன் எனக்கு போன் செய்தார். அவர் என்னிடம் நீங்கள் பாட வேண்டும் என்று கூறினார். பாடலா? நானா? எனது வாழ்வில் நான் ஒருமுறை கூட பாடியது இல்லை என்றேன். அதன்பின்னர் கேரளாவில் பாடினால் போதும் என அவர் எனக்கு ‘முன்ஜாமீன் கொடுத்தார்’” என ஜோசப் தெரிவித்தார்.