குரங்குகளை அப்புறப்படுத்தும் நகராட்சி ஊழியர்கள்  PT WEB
இந்தியா

தெலங்கானா: குழாய்நீரில் வீசிய துர்நாற்றம்..குடிநீர் தொட்டியை திறந்தபோது இறந்து கிடந்த 30 குரங்குகள்!

தெலங்கானாவில், குடிநீர்த் தொட்டியில் குரங்குகள் இறந்து கிடந்தது தெரியாமல், பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமல் ராஜ்

தெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் அருகே உள்ள நந்தி கொண்டா நகராட்சியில் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நந்திகொண்டாவின், நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்ட போது துர்நாற்றம் வீசியுள்ளது.

உயிரிழந்த குரங்குகள்

செத்து மிதந்த 30 குரங்குகள்

இதனால் சந்தேகமடைந்த நகராட்சி ஊழியர்கள், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி மீது ஏறிப் பார்த்துள்ளனர். அப்போது குடிநீர்த் தொட்டிக்குள் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் உடல் அழுகி இறந்த நிலையில் கிடந்துள்ளன. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் குடிநீர்த் தொட்டியில் இறங்கி, குரங்குகளை அப்புறப்படுத்தினர். பின்னர் குடிநீர்த் தொட்டியை முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பிறகு, மக்களுக்குக் குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த சூழலில், ‘கடந்த ஒரு வாரமாகக் குடிநீரைப் பயன்படுத்தி வந்த மக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

செத்து மிதந்த குரங்குகள்

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த குரங்குகள் சுமார் ஒரு வாரத்திற்கு முன் தண்ணீர் குடிப்பதற்காகத் தொட்டிக்குள் இறங்கி இருக்கலாம். குரங்குகள் மேலே வர முடியாமல் இறந்து போயிருக்கக் கூடும் எனத் தெரியவந்துள்ளது.

குரங்குகள் உயிரிழந்து கிடந்தது, தெரியாமல் குடிநீரை பயன்படுத்தி வந்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.