இந்தியா

கேரளாவில் தொடரும் கனமழை:  இன்றும் நாளையும் 11 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை

கேரளாவில் தொடரும் கனமழை:  இன்றும் நாளையும் 11 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை

JustinDurai
கனமழையால் கேரளாவில் 5 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் 11 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் புதன் மற்றும் வியாழன் அன்று, கொல்லம், இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, காசர்கோடு, வயநாடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய 11 மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான "ஆரஞ்சு" எச்சரிக்கை விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதர மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதோடு வரும் 24ம் தேதி வரை கேரளாவில் பரவலாக கனமழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் துலா மாத பூஜைக்காலம் முடியும் வரை, அதாவது வரும் 21 ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் முல்லைப் பெரியாறு, இடுக்கி, மலம்புழா, ஹக்கி, வாழையாறு, பம்பா, நெய்யாறு, இடமலையாறு, இரட்டையாறு, அருவிக்கரை, நெய்யாற்றங்கரை உட்பட, மாநிலத்தில் உள்ள 58 பெரிய அணைகள் நிரம்பியுள்ளன. அவற்றில் இடுக்கி, இடமலையாறு, மலம்புழா உள்ளிட்ட 12 அணைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திறக்கப்பட்டுள்ளன. மழை நீரோடு அணை நீரும் சேர்வதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கடந்த கால வெள்ளங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஒரே நாளில் மட்டும் அதிக கனமழை பொழிந்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 24க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயிருக்கின்றன. இந்தநிலையில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.