இந்தியா

ஜார்க்கண்ட் மாநில தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

ஜார்க்கண்ட் மாநில தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

jagadeesh

ஜார்க்க‌ண்ட் மாநில சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

நக்சல் ஆதிக்கம் மிகுந்த ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 3 மணி வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்த‌ம் 37 லட்சத்து 83 ஆயிரத்து 55 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முதல் கட்டத் தேர்தலில் 189 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்களிக்க வசதியாக 13 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 906 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பாரதிய ஜனதா 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணிகள் முறையே நான்கு, ஆறு மற்றும் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்தத் தேர்தலில் ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராமசந்திர சந்திரவன்ஷி, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ்வர் ஓரான் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 

பாரதிய ஜனதாவின் முன்னாள் கொறடா ராதாகிருஷ்ண கிஷோருக்கு சத்தர்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு‌மறுக்கப்பட்டதால், அவர் ஏஜெஎஸ்யூ கட்சி சார்பில் அத்தொகுதியில் களமிறங்கியுள்ளார். ஐந்து கட்டத் தேர்தல் முடிவடைந்ததும், டிசம்பர் 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.