இந்தியா

ஆரம்பிக்கலாங்களா... இந்தியக் காடுகளில் வேட்டையை தொடங்கிய 'சீட்டாக்கள்'

ஆரம்பிக்கலாங்களா... இந்தியக் காடுகளில் வேட்டையை தொடங்கிய 'சீட்டாக்கள்'

JustinDurai

நமீபியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பின்னர், இந்தியக் காடுகளில் சிவிங்கிப்புலிகள் மேற்கொள்ளும் முதல் வேட்டை இதுவாகும்.

இந்தியாவில் முற்றிலும் அழிந்துபோன சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிவிங்கிப் புலிகள் நமீபியாவிலிருந்து மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவிற்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அவற்றை  பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 17 அன்று சரணாலயத்திற்குள் விடுவித்தார்.

பொதுவாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வன விலங்குகளை இடமாற்றம் செய்யும்போது ஏதேனும் தொற்று நோய் இருந்தால் அவை மற்ற விலங்குகளுக்கு பரவாமல் இருப்பதற்காக ஒரு மாத அளவில் தனிமைப்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் சுமார் ஒன்றரை மாத தனிமைப்படுத்தலுக்குப் பின், கடந்த நவ. 5ஆம் தேதி எட்டில் இரு சிவிங்கிப்புலிகள் கூண்டிலிருந்து 5 சதுர கிமீ பரப்பளவு வனப்பகுதிக்கள் திறந்து விடப்பட்டன. இந்த நிலையில் வனப்பகுதிக்குள் நுழைந்த 24 மணி நேரத்திற்குள் அவை தனது முதல் இரையைப் பிடித்து உள்ளன.  ஃப்ரெடி மற்றும் எல்டன் என்ற அந்த இரு ஆண் சிவிங்கிப்புலிகள் இணைந்து புள்ளி மான் ஒன்றை வெற்றிகரமாக வேட்டையாடி உள்ளன.

நமீபியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பின்னர், இந்தியக் காடுகளில் சிவிங்கிப்புலிகள் மேற்கொள்ளும் முதல் வேட்டை இதுவாகும். மற்ற ஆறு சிவிங்கிப்புலிகள் இன்னும் தனிமைப்படுத்தலில்தான் உள்ளன. அவற்றுக்கு கால்நடைகளின் இறைச்சி உணவாக வழங்கி பராமரிக்கப்பட்டு வருகிறது. மற்ற சிவிங்கிப்புலிகளும் படிப்படியாக வனப்பகுதிகளில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியா வந்த 50 நாட்களில் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப சிவிங்கிப்புலிகள் தகவமைத்துக் கொண்டது காட்டுயிர் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ''குனோ வனச்சூழலை ஏற்றுக் கொண்டு பெரிய பரப்பளவில் வாழும் வகையில், கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்து 2 சிவிங்கிப்  புலிகள் காட்டிற்குள் அனுப்பப்பட்ட நல்ல செய்தி கிடைத்தது. மற்றவையும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளன. எல்லா சிவிங்கிப் புலிகளும் ஆரோக்கியமாக, சுறுசுறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்கின்றன'’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், அந்த 2 சிவிங்கிப் புலிகள் காட்டில் திரியும் வீடியோவையும் அவர் வெளியிட்டார்.

இதையும் படிக்கலாமே: 74 ஆண்டுகளுக்கு பின் இந்திய காட்டில் சீட்டா: புதிய வாழ்விடத்திற்கு ஏற்ப தகவமைக்குமா?