மத்திய பிரதேச மாநிலத்தில் ராமநவமி அன்று இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எட்டு நாட்களுக்கு பிறகு முதல் மரணம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் என்ற இடத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்ட பிறகு வன்முறையாக வெடித்தது. அன்றைய தினம் இபாரிஸ்கான் என்ற 30 வயது இளைஞர் காணாமல் போயிருந்தார், இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அவர் பிணவறையில் சடலமாக வைக்கப்பட்டுள்ளார். இதனை அவரது உறவினர்கள் நேரில் பார்த்து அடையாளம் காட்டியதை அடுத்து இறந்து போனது இபாரிஸ் கான் என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
எட்டு பேர் வரை உள்ள கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு தலையில் பலமான காயம் ஏற்பட்டதால் இபாரிஸ் கான் உயிரிழந்திருக்கிறார் என மத்தியபிரதேச காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், இபாரிஸ் கான் காவல்துறையினரின் விசாரணையில் தான் இருந்தார் என்றும், காவல்துறையினர் தான் அவரை அடித்துக் கொன்று விட்டதாகவும் அவரது சகோதரர் குற்றம் சாட்டியிருக்கிறார்.