இந்தியாவில் முதன்முறையாக ஹரியானாவை சேர்ந்த முகமது சிங் என்ற 84 வயதான நபர், ஆன்டிபாடி காக்டெயில் எடுத்துக் கொண்டு, கொரோனாவிலிருந்து மீண்டிருக்கிறார். இவர் நேற்றைய தினம் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து நலமுடன் வீடுதிரும்பியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
லேசான மற்றும் மிதமாக கொரோனா தாக்கம் இருக்கும் நபர்கள், தங்களை காப்பாற்றிக் கொள்ள இப்படியான அதிநவீன ஆன்டிபாடி காக்டெயிலை எடுத்துக் கொள்வர். இந்த மருந்தில், காசிரிவிமாப் மற்றும் இம்டெவிமாப் (Casirivimab and Imdevimab) ஆகிய ஆன்டிபாடி சக்திகள் கொண்டிருக்கும். இதற்கு முன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவருக்கு பாதிப்பு ஏற்பட்டபோது இதை எடுத்துக்கொண்டுள்ளார். இந்த மருந்தை, ஒருவருக்கு தந்தால், அவர் மோசமான நிலைக்கு செல்லும் அபாயம் தடுக்கப்படும். மருத்துவமனையிலிருந்து அவரை விரைந்து வீட்டுக்கும் அனுப்பிவைத்துவிடலாம். தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டு தேவைப்படாமல் போகும். இம்மருந்தை அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என கூறி இந்திய அரசு கடந்த 10ம் தேதி முதல் உபயோக அனுமதி கொடுத்தது.
இதை இந்தியாவில் சிப்லா மற்றும் ரோச் இந்தியா நிறுவனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளன. இந்த மருந்தின் விலை அதிகபட்சமாக ரூ.1,19,500 எனவும், ஒரு டோஸ் மருந்தின் விலை ரூ.59,570 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பாக்கெட் வாங்கினால், இரண்டு நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது `ரோச் இந்தியா நிறுவனம்.’
குணமாகி வீடுதிரும்பியிருக்கும் முகமதுவின் உடல்நலத்தை தொடர்ந்து கண்காணிப்போம் என அவருக்கு சிகிச்சை தந்திருக்கும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த மருந்தை, கோவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு முதல் ஒரு வாரத்துக்குள் தந்துவிட்டால், அவர்களில் 70 முதல் 80 சதவிகித மக்கள் மேற்கொண்ட சிகிச்சைக்காக மருத்துவமனை நாடவேண்டியிருக்காது என சொல்லப்படுகிறது. தற்போது இந்தியாவில் பரவிவரும் பி.1.617 திரிபு வகை கொரோனாவுக்கு எதிராகவும் இது செயல்படும் என சொல்லப்பட்டுள்ளது.