இந்தியா

‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்

‘லோக்பால் தலைவர்’ பினாகி சந்திரகோஷ் வழங்கிய அதிரடி தீர்ப்புகள்

webteam

ஊழலை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டச் சட்டம்தான் லோக்பால். இதனை 2013ஆம் ஆண்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதன்பின்னர் ஜனவரி 1ஆம் தேதி 2014 முதல் இச்சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அமலுக்கு வந்தது. ஆனால் நீண்ட வருடங்களாக லோக்பால் அமைப்பில் மத்திய அரசு முன்னைப்பு காட்டவில்லை. இது தொடர்பாக உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு லோக்பால் அமைப்பு உருவாக்குவதற்கான கால கெடுவை விதித்தது. 

இதனையடுத்து இச்சட்டம் அமலுக்கு வந்து 6ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு லோக்பால் அமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் முதல் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அவரின் பின்புலம் குறித்து விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

யார் இந்த பினாகி சந்திரகோஷ்?

பழைய கல்கத்தா மாநிலத்தில் 1952ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி பிறந்தார் பினாகி சந்திரகோஷ். இவரது குடும்பத்தில் பலர் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களாக உள்ளனர். இவரின் தந்தை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். பினாகி பட்டப்படிப்பை முடித்து 1976ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். அதன்பின்னர் 1997ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். இங்குப் பணியாற்றி வந்த இவர் பிறகு ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி மாற்றம் செய்யப்பட்டார். 

அதன்படி 2012ஆம் ஆண்டு ஹைதராபாத் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இதனையடுத்து 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கிட்டத்தட்ட உச்சநீதிமன்ற நீதிபதியாக 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார் பினாகி சந்திரகோஷ். இவர் 2017ஆம் ஆண்டு மே மாதம் 27 தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இவர் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்?

பினாகி சந்திரகோஷ் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய போது 190 தீர்ப்புகள் மற்றும் ஆணைகளை பிறப்பித்துள்ளார். அத்துடன் 85 தீர்ப்புகளை தன் கைப்பட எழுதியுள்ளார். இவற்றில் முக்கியமாவை:

  • முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தார்.
  • ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைவிதித்த நீதிபதிகள் அமர்வில் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுடன் இணைந்து இவர் தீர்ப்பளித்தார்.
  •  நீதிபதி ஹெச்.எல்.தத்து மற்றும் நீதிபதி கலிஃபுல்லா ஆகியோருடன் இணைந்து இவர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு மாநில அரசு மன்னிப்பு வழங்க முடியாது என்ற தீர்ப்பை வழங்கினார்.
  • 2018ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேச மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்ற இவர், குடியரசுத் தலைவர் ஆட்சியை அகற்றி உத்தரவிட்டார்.
  •  நீதிபதி ஆர்.எஃப்.நரிமேனுடன் இணைந்து இவர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் கல்யாண் சிங் ஆகியவர்கள் மீது குற்றப்பத்திரிகை தயாரிக்க உத்தரவிட்டார்.
  • அரசு விளம்பரங்களுக்கு விதிமுறைகள் வகுத்த அமர்விலும் இவர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதுவரை இவர் உச்சநீதிமன்றத்தில் 104 குற்ற வழக்களுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். அத்துடன் 72 சிவில் வழக்களில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அத்துடன் மூன்று முறை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில்தான் தற்போது லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக 66 வயதாகும் பினாகி சந்திரகோஷ் பதவியேற்றுள்ளார். இவரின் பதவி காலம் மே 28 2022 (70 வயது) வரையுள்ளது குறிப்பிடத்தக்கது.