இந்தியா

ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு வெளியே மீண்டும் துப்பாக்கிச் சூடு

jagadeesh

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு வெளியே மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது டெல்லியில் கடந்த 4 நாட்களில் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதேபோல ஜாமியா நகர் பகுதியில் உள்ள ஜாகின் பக் பகுதியிலும் போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில், ஜாமியா பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது நுழைவுவாயில் அருகே, இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. எனினும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுதொடர்பாக ஜாமியா கூட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இருசக்கர வாகனத்தில், red jacket அணிந்தபடி வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் ஜாமியா பல்கலைக்கழகம் அருகே குவிந்தனர். அவர்கள், ஜாமியா நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டமும் நடத்தினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது கடந்த 4 நாட்களில் மட்டும் 3 முறை தனிநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை ராஜ்காட் நோக்கி பேரணியாக சென்ற ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார். இதைத்தொடர்ந்து சனிக்கிழமை ஜாகின் பக் பகுதியில் போராட்டகாரர்கள் மீது 25 வயது இளைஞர் ஒருவர் இருமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினார். எனினும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே ஜாமின் பக் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, டெல்லி தென்கிழக்கு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பிலிருந்து சின்மோயி பிஸ்வால் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சின்மோயி பிஸ்வாலுக்குப் பதில் குமார் யானேஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.