இந்தியா

தீபாவளி பண்டிகை: திருச்சி, தூத்துக்குடியில் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு

தீபாவளி பண்டிகை: திருச்சி, தூத்துக்குடியில் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு

webteam

டெல்லியில் பட்டாசுகளை வெடிக்கவும் விற்பனை செய்யவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த தடை அமலுக்கு வந்துள்ளது. அதேபோல காற்று காற்று மாசு அதிகம் உள்ள திருச்சி தூத்துக்குடி ஆகிய நகரங்களில் பட்டாசுகளை வெடிக்க கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி டெல்லியில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காற்று மாசு மோசமாக உள்ள நகரங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாத தரவுகளின் Poor மற்றும் அதற்கு மேல் காற்று மாசு மோசமாக உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு மிதமான அளவில் உள்ள நகரங்களில் பசுமை பட்டாசுகளை, மாநில அரசுகள் அறிவித்துள்ள 2 மணி நேரம் மட்டுமே வெடிக்கவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறி பட்டாசு விற்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், வெடித்தால் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும், 122 நகரங்களில் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை காண்காணிக்க வேண்டும் எனவும் பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

இந்த 122 நகரங்களில் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பட்டாசு தடை தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், காவல்துறை டிஜிபிக்கள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ள பசுமை தீர்ப்பாயம், மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், காற்று மாசு தொடர்பான உரிய தரவுகளை தங்களது இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.