இந்தியா

உ.பி.யில் பட்டாசுத் தொகை பாக்கி: உதவிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி, நெகிழ்ந்த சிவகாசி வியாபாரி

உ.பி.யில் பட்டாசுத் தொகை பாக்கி: உதவிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி, நெகிழ்ந்த சிவகாசி வியாபாரி

webteam

உத்தரப்பிரதேசம் அலிகார் நகரில் ஒருவரிடம் தீபாவளிப் பட்டாசுகளுக்கான பாக்கித்தொகை வசூலிப்பதில் அலைக்கழிக்கப்பட்ட சிவகாசி வியாபாரி, அலிகார் போலீசாரிடம் புகார் செய்திருந்தார். இந்த பாக்கித் தொகையை வசூலித்துக் கொடுத்துப் பாராட்டைப் பெற்றிருக்கிறார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான தமிழர் ஜி. முனிராஜ் ஐ.பி.எஸ். இதுபற்றி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிவகாசி நகரில் இருந்து தீபாவளி, திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்குத் தேவைப்படும் பட்டாசுகள் உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பப்படுவது வழக்கம். சில நேரங்களில் பணத்தை அனுப்பாமல் சிவகாசி பட்டாசு நிறுவனங்களை ஏமாற்றுவதும் நடக்கும்.

கடந்த இரு ஆண்டுகளாக சிவகாசியின் சிறு, குறு மற்றும் நடுத்தரப் பிரிவு நிறுவனமும் அலிகாருக்கு பட்டாசுகளை அனுப்புகிறது. அதில் ரூ. 69 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளைப் பெற்ற வைஷாலி நிறுவனத்தின் ஜிதேந்தர்குமார் பணத்தை அனுப்பாமல் ஏமாற்ற முயன்றார்.

கைப்பேசி மூலம் புகார்

தன்னை ஏமாற்றும் நிறுவனத்தின்மீது காவல்துறையில் புகார் அளிக்க சிவகாசி நிறுவன உரிமையாளர் 'ஒரு சொல்' காந்தீஸ்வரன் முடிவெடுத்தார். உ.பி. காவல்துறை இணையதளத்தில் அலிகர் எஸ்எஸ்பியின் கைப்பேசி எண்ணைக் கண்டெடுத்துப் புகார் அளித்துள்ளார். அதன் பலனாக அடுத்த இரு தினங்களில் பட்டாசுக்கான பாக்கித் தொகை முழுவதும் அவரது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

பாக்கித் தொகை உடனே கிடைத்ததில் மகிழ்ந்த காந்தீஸ்வரன், அலிகார் காவல்துறை எஸ்எஸ்பியான தமிழர் ஜி.முனிராஜ் ஐபிஎஸ் அவர்களைப் பாராட்டியுள்ளார். இதுபற்றிப் பேசிய காந்தீஸ்வரன், ''நான் தனியாகச் செலவுசெய்து கொண்டு நேரில் செல்லும் தேவையும் இல்லாமல் போன் மூலம் அளித்த புகாரிலேயே எனது தொகை கிடைத்துள்ளது.தமிழ் அதிகாரி முனிராஜிடம் அளித்த புகாருக்கு உடனடியாகக் கிடைத்த பலன் நம்பமுடியாததாக உள்ளது. அவருக்கு எனது நன்றிகள்'' எனத் தெரிவித்துள்ளார்.

உ.பி. சிங்கம் முனிராஜ்

உத்தரப்பிரதேச மாநில கொள்ளையர்களால் கோவையில் கொள்ளையடிக்கப்பட்ட பல கோடி ரூபாய் நகைகளை முழுவதுமாக மீட்டார். அதன் குற்றவாளிகளையும் அதிகாரி முனிராஜ் கைது செய்தார். இங்கு இன்னல்களுக்கு உள்ளாகி உதவி பெற்ற தமிழக லாரி ஓட்டுநர்களிடமும் 'உ.பி. சிங்கம்' எனும் பெயரில் அதிகாரி முனிராஜ் நன்கு அறிமுகமாகியுள்ளார்.

இதுபற்றிப் பேசிய முனிராஜ் ஐபிஎஸ், ''பட்டாசு அனுப்பிய ரசீது உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரித்ததில் அனைத்தும் உண்மை எனத் தெரிந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து வந்த புகார் என்பதால் நானே நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்தேன்'' என்றார்.

உயர் அதிகாரிகளாக தமிழர்கள்

ஏதாவது சிக்கலில் சிக்கித் திணறும் தமிழர்களுக்கு உ.பி.யில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மூலம் உதவிகள் கிடைக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட பல முக்கியப் பதவிகளில் சுமார் 20 அதிகாரிகள் பணியாற்று வருகின்றனர்.