fire accident visakhapatnam
இந்தியா

ஆந்திரா: திடீரென ஏற்பட்ட தீவிபத்து.. மொத்தமாக எரிந்து சேதமான படகுகள்.. மீட்புப்பணிகள் தீவிரம்

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 60க்கும் மேற்பட்ட படகுகளில் தீ விபத்து ஏற்பட்டதில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

யுவபுருஷ்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகமானது இந்தியாவில் உள்ள 13 துறைமுகங்களில் முக்கிய துறைமுகமாக பார்க்கப்படுகிறது. சரக்குகளை கையாள்வதில் இந்தியாவில் இரண்டாவது பெரிய துறைமுகமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் படகுகளில் தீ விபத்து ஏற்பட்டது.

படகுகளில் மீன் பிடிக்க செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த டீசல், ஆயில் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவை தீப்பற்றியதில், தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த படகுகளுக்கும் பரவியது. இதனால், 60க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் எரிந்து சேதமாயின.

இது குறித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தின் போது படகுகளில் இருந்து கடலில் குதித்து சிலரை தீயணைப்பு துறையினர் காப்பாற்றியுள்ளனர். மேலும் படகுகளில் யாராவது சிக்கி உள்ளனரா என்றும் அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.