குஜராத்தின் மணிநகர் அருகே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியதில், வந்தே பாரத் ரயிலின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டது. இதில் சேதமான வந்தே பாரத் ரயில் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
காந்திநகர் - மும்பை வரையிலான ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை கடந்த வாரம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மும்பை சென்ட்ரலில் இருந்து குராஜத்தின் காந்திநகரில் இருந்து ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் காலை 11.15 மணியளவில் வத்வா நிலையத்திற்கு மணிநகர் செல்லும் ரயில் பாதையில் எருமை மாடுகள் தண்டவாளத்தில் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இன்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே அதிகாரிகள் விரைவில் ரயில் சீரமைக்கப்படும் என உடனடியாக தெரிவித்தனர். மேலும், “எதிர்பாராத விதமாக எருமை மாடுகள் குறுக்கே வந்தது விட்டது. விபத்தின் போது ரயில் சுமார் 140 கிமீ வேகத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது பிரேக் போட்டு இருந்தால் ரயில் நிலை தடுமாறி பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கக் கூடும்’” என்று தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து மும்பை சென்ட்ரல் டெப்போவில் முன் பெட்டியின் மூக்கு கோன் கவர் புதியதாக மாற்றப்பட்டது. மற்றும் கூடுதல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு மீண்டும் ரயில் சேவை தொடங்க உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே காவல்துறை வழக்கு பதிந்திருக்கிறது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில், `பிரிவு 147-ன் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது’ என்றுள்ளார். இந்த பிரிவின் கீழான வழக்குகள், ரயில் நிலையத்தை அத்துமீறி பயன்படுத்துவோர் மீதும் தவறாக பயன்படுத்துவோர் மீதும் பதியப்படும் வழக்காகும். இருப்பினும் எருமை மாடுகளின் உரிமையாளர் யாரென்ற அடையாளம் இன்னும் சரியாக தெரியவரவில்லை. விரைவில் அவர்கள் அடையாளம் காணப்படுவர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வந்தே பாரத் ரயில் சென்னையில் உள்ள ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது. வந்தே பாரத் ரயில், தற்போது இந்தியாவின் அதிவேகத் தொடர்வண்டி என்பது குறிப்பிடத்தக்கது. இது சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சென்று சாதனை படைத்திருந்தது.