அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கை லக்னோ நீதிமன்றம் தினமும் விசாரித்து 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாபர் மசூதியை இடித்த விவகாரத்தில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட பாஜக தலைவர்களுக்கு எதிராகவும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருந்தன.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து 2001-ம் ஆண்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு அவர் மீதுள்ள கிரிமினல் குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. இப்போது ரேபரேலியில் இருக்கும் அந்த வழக்கு, அரசியல் அமைப்பு சட்டத்தின் 142 விதியின் கீழ் உச்சநீதிமன்றத்தின் அசாதாரண அதிகாரங்களை பயன்படுத்தி லக்னோவில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தான் பல அடையாளம் தெரியாத கர சேவகர்களின் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பான இது போன்ற அனைத்து வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து 2 ஆண்டுகளுக்குள் லக்னோவில் விசாரித்து முடிக்கப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாபர் மசூதி வழக்கு 25 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுவது ஏன் என அதிருப்தி வெளியிட்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் நியாயம் ஏய்க்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தது.
எனினும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி எதிரான கிரிமினல் குற்றச்சாட்டுகள் மறுபடியும் விசாரிக்கப்படுமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் எதுவும் தெரிவிக்காமல் வழக்கை ஒத்தி வைத்தது.