இந்தியா

சிறுநீர் கழித்த விவகாரத்தில் இவ்வளவு அலட்சியமா?..ஏர் இந்தியாவுக்கு அபராதம்-டிஜிசிஏ அதிரடி!

சிறுநீர் கழித்த விவகாரத்தில் இவ்வளவு அலட்சியமா?..ஏர் இந்தியாவுக்கு அபராதம்-டிஜிசிஏ அதிரடி!

webteam

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, டிஜிசிஏ 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், சக பயணி ஒருவர் குடிபோதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று சிறுநீர் கழித்ததாகச் செய்திகள் வெளியாகின.

இந்த விவகாரத்தில், ஏர் இந்தியா நிறுவனம் அலட்சியத்தைக் கையாண்டதற்காக, ரூ .30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவத்தின்போது பணியில் இருந்த விமானியின் உரிமத்தை 3 மாதத்திற்கு ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக ஏர் இந்தியாவின் விமானச் சேவை இயக்குனருக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகு, இந்த விவகாரம் குறித்து, ஏர் இந்தியாவின் குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு அந்தப் பெண்மணி கடிதம் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து இதுகுறித்த விசாரணையில், அந்தப் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பது தெரியவந்தது. இதையடுத்து ஏர் இந்தியா விமானத்தில் அவர் பயணிக்க 30 நாட்கள் தடை விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் உத்தரவிட்டது. 

மறுபுறம், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். மேலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தலைமறைவாகி இருந்த சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி சங்கர் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களில் பறக்க நான்கு மாதங்கள் தடை விதித்து அந்நிறுவனம் புதிய உத்தரவை நேற்று பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், ஏர் இந்தியா நிறுவனம் அலட்சியத்தைக் கையாண்டதற்காக, ரூ .30 லட்சம் அபராதம் விதித்து இன்று டிஜிசிஏ உத்தரவிட்டிருக்கிறது.

- ஜெ.பிரகாஷ்