இந்தியா

'சிந்து சமவெளி' நாகரிகமா? 'சிந்து சரஸ்வதி' நாகரிகமா? - பட்ஜெட் சர்ச்சை

'சிந்து சமவெளி' நாகரிகமா? 'சிந்து சரஸ்வதி' நாகரிகமா? - பட்ஜெட் சர்ச்சை

webteam

மத்திய பட்ஜெட்டில், 'சிந்து சமவெளி' நாகரிகம் என்பதை 'சிந்து சரஸ்வதி' என்று குறிப்பிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய பாகி‌ஸ்தானில் உள்ள சிந்து நதியையொட்டி தழைத்தது சிந்து சமவெளி நாகரிக‌மாக கருதப்படுகிறது. உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றாக கருதப்படும் சிந்து சமவெளி நா‌கரிகத்தை மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்டு பேசினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அதில், சிந்து சரஸ்வதி நாகரிகத்தையொட்டி ஹரப்பா காலத்தைய பகுதியான அகமதாபாத் அருகில் உள்ள லோதலில் சிறப்பு மிக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும். 2020-21இல் கலாசாரத்துறைக்கு 3,150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் சிந்து சமவெளி நாகரிகத்தை சிந்து ‌சரஸ்வதி என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ‌அறிக்கையில், எங்கும் எதிலும் இந்துத்துவா திணிப்பில் தீவிரம் காட்டி வரும் மத்திய பாரதிய ஜனதா அரசு, இந்த நிதிநிலை அறிக்கையில் சிந்து சமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று பெயர் சூட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கீழடியில் கிடைத்த தமிழர் நாகரிகம் உள்ளிட்ட பல ஆய்வுகளின் முடிவுகளையும் மாற்றி, வரலாற்றைத் திருத்தவும், தீர்க்கவும் முயல்வதை தமிழகம் பொறுத்துக் கொள்ளாது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்