இந்தியா

பிரச்சாரத்திற்காக ரித்விக் திரைப்படத்தை பயன்படுத்திய பாஜக - உறவினர்கள் கடும் எதிர்ப்பு

பிரச்சாரத்திற்காக ரித்விக் திரைப்படத்தை பயன்படுத்திய பாஜக - உறவினர்கள் கடும் எதிர்ப்பு

webteam


குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக கட்சியினர் பெங்கால் திரைப்பட மேதை ரித்விக் கட்டக்கின் படத்தை பயன்படுத்தியதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேடிற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மேற்குவங்க முதல்வர் இந்தச் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக போராட பல கட்சியினருக்கு அழைப்பு விடுத்து வருகிறார். மேலும் சில தினங்களுக்கு முன்பு அவரது மாநிலத்தில் பெரிய பேரணியையும் நடத்தினார்.

இந்நிலையில் பெங்கால் திரைப்பட மேதையாக கருதப்படும் ரித்விக் கட்டக்கின் படங்கள் குறித்த சர்ச்சை ஒன்று புதியதாக முளைத்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் சார்பில் ஆறு நிமிட பிரச்சார வீடியோ ஒன்று பயன்படுத்தப்படுகிறது. அந்த வீடியோ காட்சி, பெங்கால் திரைப்பட மேலை ரித்விக் கட்டக்கின் படங்களில் இருந்து எடுத்தாளப்பட்டதாக தெரிகிறது. ஆகவே அந்தக் காட்சிகளை பயன்படுத்துவதற்கு ரித்விக் கட்டக்கின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டக்கின் குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் இருபத்து நான்கு உறுப்பினர்கள், இந்தத் திரைப்பட கட்சி பயன்படுத்துவதை “ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறுயுள்ளனர். மேலும் இது “அவரின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறானது” என்றும் கூறியுள்ளனர்.

“எந்தப் படத்தின் ஒரு பகுதியையும் பயன்படுத்துவதையோ, அதன் கருத்தை எடுத்து தங்களுக்கு தக்கவாறு நியாயப்படுத்துவதையோ எங்களால் ஏற்க முடியாது” என்று அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும் அதன் உள்ளடக்கத்தை குறைக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். கட்டக்கின் திரைப்படங்கள் சமூகத்தில் கீழ்மட்டத்தில் உள்ள பிரிவினர், குறிப்பாக சமூக-அரசியல் எழுச்சிகள் காரணமாக இடம்பெயர்ந்து ஓரங்கட்டப்பட்டவர்களின் மீது ஆழ்ந்த பச்சாதாபத்தை ஏற்படுத்துவது என கட்டாக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆகவே அரசியல் ஆதாயத்திற்காக அவரது படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதையும் அவர்கள் எதிர்த்துள்ளனர். அவர், மதச்சார்பின்மையின் முதுகெலும்பாக இருந்தார் என்றும், அவரது எழுத்தும் சினிமாவும் அதற்கான சான்றாக இருந்ததை ஒவ்வொரும் அறிவார்கள் என்றும் கட்டக்கின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.