22 வருடமாக தனது பெற்றோரைத் தேடும் வாய் பேச முடியாத பெண்ணுக்கு சினிமா பாடல் கைகொடுத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள எடத்துவா பகுதியைச் சேர்ந்தவர் மரியா (35). வாய் பேச முடியாதவர். இவரது கணவர் ரோடிமோன். இவர்களுக்கு ஆறு குழந்தைகள். மரியா, தனது 13 வயதில் மும்பையில் தனது தந்தையுடன் ஏற்பட்ட கோபம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியவர். ரயிலில் ஏறி தூங்கிய அவர், இறங்கி இடம் இடுக்கியில் உள்ள கட்டப்பனா. பின்னர் அவர் ஆசிரமம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்குள்ளவர்கள் அவருக்கு வைத்த பெயர் மரியா.
வளர்ந்தபின் அந்த ஆசிரமத்துக்குத் தொடர்புடைய சமூக சேவகர் ரோடிமோனைத் திருமணம் செய்துகொண்டார். மரியா, வீட்டில் இருந்து வந்துவிட்டாலும் தனது பெற்றோரை அவரால் மறக்க முடியவில்லை. அவர்களை அவ்வப்போது தேடி வந்துள்ளார். எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவர் தனது கணவரின் செல்போனில் சமீபத்தில் பாடல் ஒன்றை பார்த்தார். அது ஆமிர்கான் நடித்த ’அக்கேலே ஹம் அக்கேலே தும்’ (தனிமையில் நாம் தனியாக நீ) படத்தின் பாடல். அந்தப் பாடலின் ஷூட்டிங் நடத்தப்பட்ட இடத்தை பார்த்ததும் மரியாவுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அதன் அருகில்தான் மரியாவின் வீடு இருந்திருக்கிறது.
வாய் பேச முடியாததால் பள்ளிக்குச் செல்லாத மரியா, நடன வகுப்புக்குச் சென்று வந்துள்ளார். அங்கு அவருடன் பயின்றவர்களுடன் இந்தப் பாடலின் படப்பிடிப்பை பார்த்திருக்கிறார் மரியா. இந்த விஷயத்தை தனது கணவரிடம் விவரித்தார்.
மகிழ்ச்சி அடைந்த அவர், உன் பெற்றோரை விரைவில் கண்டுபிடித்துவிடலாம் என நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் அந்தப் படத்தின் இயக்குனர் மன்சூர் கான் ஊட்டிக்கு வந்திருந்த தகவல் அறிந்து சென்று சந்தித்தார். அப்போது, அந்த பாடலின் ஷூட்டிங் நடந்த இடம் பற்றி விசாரித்தார் ரோடிமோன். மும்பை போரிவிலியில் உள்ள ஃபேண்டஸி பார்க் என்று சொன்னார் அவர். இதையடுத்து மரியாவின் பெற்றோரைத் தேடி குழந்தைகளுடன் மும்பை செல்ல இருக்கிறார் ரோடிமோன்.
தற்போது ஆலப்புழாவில் வாடகை வீட்டில் வசிக்கும் அவர் பண உதவியை எதிர்பார்க்கிறார் என்று மலையாள நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து கேரள அமைச்சர் பாலன், எம்.பி சுரேஷ், வழக்கறிஞர் தீபக் பிரகாஷ், ராஜஸ்தான் மாநில மலையாள சங்கத் தலைவர் ஷிபு உட்பட பலர் மரியாவின் கனவு நிறைவேற உதவ முன் வந்துள்ளனர்.
மரியா தனது வீடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை ஓவியங்களாக வரைந்துள்ளார். அதில், காலனி தெருவும் அருகில் மசூதி, மதராசா போன்றவையும் பல்வேறு பகுதிகளில் இருந்து இணையும் சாலையும் தெரிகின்றன.
இதையடுத்து மும்பை போரிவிலி பகுதியில் உள்ள சில மதராஸா அலுவலகங்களையும் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார் ரோடிமோன். அவருக்கு உதவுவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். மரியா தனது குடும்பத்தினருடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.