இந்தியா

இஸ்லாமியர் கொல்லப்பட்ட சம்பவம்: குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேருக்கு அரசு நிறுவனத்தில் வேலை

Rasus

உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் பசு இறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேருக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாத்ரி நகரம் அருகேயுள்ள கிராமத்தில், பசு இறைச்சியை வைத்திருந்ததாக கூறி முகமது இக்லக் என்ற முதியவர் அடித்துக்கொல்லப்பட்டார். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய 15 இளைஞர்களுக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர் இதற்கு பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, சம்பந்தப்பட்ட பகுதியில் புதிய மின் திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற விதிமுறையின்படியே இளைஞர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கியிருப்பதாக தேசிய அனல் மின் கழக செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். பசு இறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.