இந்தியா

அச்சத்தில் காஷ்மீரை விட்டு வெளியேறும் பீகார் மக்கள்

கலிலுல்லா

காஷ்மீரில் வசிக்கும் வெளி மாநிலத்தவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆலேசானை நடத்த உள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பொது மக்கள் கொல்லப்படும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் பொது மக்கள் 11 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக பண்டிட் இனத்தவர்களும், காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்களும் பயங்கரவாதிகளின் முக்கிய இலக்காக உள்ளனர். இவ்வரிசையில் குல்காம் பகுதியில் வசித்த 3 பீகாரிகள் கடந்த 5ஆம் தேதி கொல்லப்பட்டனர். இந்நிலையில் இத்தாக்குதல்களின் பின்னணி குறித்து விரிவாக விசாரிக்க என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே காஷ்மீரில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பீகார் தொழிலாளர்கள் உயிர் பயத்தில் கிடைக்கும் பேருந்திலும் ரயிலிலும் ஏறி வெளியேறி வருகின்றனர். பயங்கரவாதிகள் பொது மக்களின் ஆதார் அட்டைகளை சோதித்து வெளிமாநிலத்தவராக இருந்தால் தாக்குவதாக பீகார் தொழிலாளர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். தங்கள் மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.