பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷ்மிபூர் கிராமத்தில் வசிப்பவர் மகேந்திர பாண்டே. 40 வயதான இவர், அதே பகுதியைச் சேர்ந்த மரீவா என்பவருக்கு கடனாக ரூ.2 லட்சம் தந்ததாகவும், அந்தத் தொகையை மரீவா திரும்பச் செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாண்டே, மரீவாவின் 6ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மகளை, தாம் படிக்க வைப்பதாகக் கூறி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் அந்தச் சிறுமியை ரகசிய திருமணம் செய்திருப்பதாக மரீவாவுக்குத் தகவல் கிடைக்கவே, இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார், “பாண்டே, மரீவாவுக்கு ரூ.2 லடசம் கடனாகக் கொடுத்துள்ளார். அதை அவர் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அவரது மகளைப் படிக்க வைப்பதாகச் சொல்லி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், அந்த சிறுமியை ரகசிய திருமணமும் செய்துள்ளார். இதனால் பாண்டேவின் 2வது மனைவியாக அந்தச் சிறுமி, 3 மாதங்கள் அவருடைய வீட்டில் வாழும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, அவருக்கு திருமணமாகி குழந்தைகள் வேறு உள்ளனர். இந்த தகவல் மரீவாவுக்கு கிடைத்தவுடன் எங்களிடம் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தினோம். தற்போது பாண்டே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாண்டே, “அந்த சிறுமி மற்றும் அவரது தாயாரின் சம்மதத்துடனே திருமணம் செய்து கொண்டேன். தற்போது அந்த சிறுமியின் தாய் என்னை பிளாக் மெயில் செய்கிறார். பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார். நான் வலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். சில ஊடகங்கள் தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
பாண்டே வீட்டில் அந்த சிறுமி 3 மாதங்கள் வசித்ததால், அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனை தரும் அறிக்கையும், அந்த சிறுமி அளிக்கும் வாக்குமூலத்தை அடுத்து அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.