கார் விபத்து முகநூல்
இந்தியா

பீகார்: திருமண ஷாப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய மணமகன்.. திடீர் விபத்தால் நொறுங்கிப்போன கனவு!

பீகாரில் திருமண ஷாப்பிங் முடித்துவிட்டு மணமகன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட கார் விபத்தில், மணமகன் உட்பட மூவர் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பீகாரில் திருமண ஷாப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட கார் விபத்தில், மணமகன் உட்பட மூவர் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் உள்ள கயாவில் வசித்து வருபவர் சவுரப். இவருக்கு வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்துக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், மணமகன் சவுரப்பிற்கு ‘திலக்’ (குங்குமம்) வைக்கும் விழா வரும் நவம்பர 18 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்திருக்கிறார் சவுரப்.

விபத்து

இந்நிலையில் திருமணப் பொருட்களை வாங்குவதற்காக சவுரப், தனது சகோதரரும் தொழிலதிபருமான கவுரவ் மற்றும் தந்தை சஞ்சய் குமார் ஆகியோருடன் காசியாபாத்திற்கு காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பொருட்களை வாங்கிக்கொண்டு காசியாபாத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ்வேயில் காகோரி டோல் பிளாசா அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கே நின்று கொண்டிருந்த டிரெய்லர் டிரக் மீது இவர்கள் வந்து கொண்டிருந்த கார் வேகத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில், சவுரவ்வின் சகோதரர் கவுரவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சவுரவ் மற்றும் அவரது தந்தை சஞ்ஜீவ் குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூழலில், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, விபத்து தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டதில், “இவர்களின் வாகனம் மணிக்கு 100 - 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டியவரின் தூக்கமின்மை காரணமாகவும் இந்த விபத்து நடந்திருக்கலாம். லேசான மூடுபனி காரணமாகவும் விபத்து நடந்திருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்காட்சி

இந்நிலையில் இவர்களது காரில் ரூ 8 லட்சம் மதிப்பிலான பணமும், ரூ 5 - 6 லட்சம் மதிப்பிலான நகைகள், ஆடைகள், பரிசுப்பொருட்கள் என அனைத்தும் கிடைத்தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கார் விபத்தில் காரின் முன்புறம் சுக்குநூறாக நொறுங்கிய புகைப்படங்கள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.