Dog model image freepik
இந்தியா

ஆந்திராவில் சோகம்| கடித்த வளர்ப்பு நாய்.. ரேபிஸ் நோய் பரவியதில் தந்தை, மகன் பரிதாப உயிரிழப்பு!

ஆந்திராவில் வளர்ப்பு நாய் கடித்து, ரேபிஸ் நோய் பரவியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

ஆந்திர மாநிலம் ஈகுவாபேட்டாவைச் சேர்ந்தவர் அல்லிபள்ளி நரசிங்க ராவ் (59). இவரது மனைவி சந்திரவதி. இவர்களுடைய மகன் பார்கவ் (27). இவர்கள் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாய், கடந்த மாத இறுதியில் அவர்கள் மூவரையும் கடித்துள்ளது. நாய் கடித்ததை அவர்கள் பொருட்படுத்தாமல் மெத்தனமாக இருந்ததாகவும், சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் அந்த நாய் இறந்துபோனதாகவும், அதன்பிறகே அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

dog model image

இதில் நரசிங்க ராவ் மற்றும் மகன் பார்கவ் ஆகியோருக்கு ரேபிஸ் வைரஸ் என்ற நோய் பரவியதாகவும் இருவருக்கும் அந்த வைரஸ் மூளைக்கும் பரவியதாகவும் தெரிய வந்தது. இதில், பார்கவ் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுக்காததால் இறந்துபோனதாகவும், அவரைத் தொடர்ந்து பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்த நரசிங்க ராவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதேநேரத்தில், அவருடைய மனைவி சந்திரவதி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:மீண்டும் குப்பைப் பலூன்கள்| தென்கொரியாவுக்குப் பதிலடி கொடுத்த வடகொரியா!

இதுகுறித்து பீமிலி நகர்ப்புற சுகாதார மைய மருத்துவ அலுவலர் கல்யாண் சக்ரவர்த்தி, “குடும்பத்தினருக்கு மே 31ஆம் தேதி சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் அவர்கள் முதல் மருந்தை மட்டும் எடுத்துவிட்டு மீதமுள்ள மருந்தைத் தவிர்த்தனர். இதனால்தான் இறப்பு நேரிட்டது. எனினும், சந்திரவதி நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

dog model image

கடந்த ஆண்டில் மட்டும் 27.59 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் நாய்க்கடிகள் பதிவாகியுள்ளன. 2023ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் 4.35 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி வழக்குகள் பதிவாகியுள்ளன, இது நாட்டிலேயே மிக அதிகமாக உள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: ”ஒருத்தருக்கு சார்பா நடக்குதா”-ரிசர்வ் டே ஏன் இல்லை? விமர்சனத்தை சந்திக்கும் 2வது அரையிறுதி போட்டி!