நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் (FASTag) எனப்படும் மின்னணு வழி பணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது. இதன் படி FASTag இருந்தால் மட்டுமே வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்க முடியும்.
ஃபாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கடந்த ஒன்றாம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வாகன ஓட்டிகள் இந்த திட்டத்திற்கு மாறுவதற்கு வசதியாக அமலாக்கத்தை 15 நாட்களுக்கு மத்திய அரசு ஒத்தி வைத்தது. இந்நிலையில் ஃபாஸ்டேக் கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ஃபாஸ்டேக் பாதையில் செல்வோர் பிறவகையில் கட்டணம் செலுத்தினால் இரட்டிப்பு தொகை வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் வாகனப் போக்குவரத்து விரைவாக நடைபெறுவதுடன் காத்திருக்கும் நேரம் குறைவதால் மிகப்பெரிய அளவில் எரிபொருளும் மீதமாகும் என அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முதல் ஒரு மாதத்திற்கு மட்டும் சுங்கச்சாவடிகளில் 25% பாதைகளில் ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்களும் செல்ல அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் மிகவும் நெரிசல் உள்ள சுங்கச்சாவடிகளில் மட்டுமே இந்த தற்காலிக நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.