குஜராத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மையப்படுத்தி சிறுவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது.
இந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் திருத்தப்பட்டு புதிய சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி, அபராதம் 10 மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து அபாராதத் தொகை மாநில அரசுகள் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே புதிய சட்டம் தொடர்பாக பல இடங்களில் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் சிறுவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இதில் ஐந்து வயது சிறுவர்கள் முதல் 25 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இடம்பெற்றுள்ள விதிமுறைகள் குறித்து சிறுவர்கள் பதாகைகள் மூலம் விளக்கம் அளித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஒய்யார நடையில் வலம் வந்த இளைஞர்கள், ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வெளிப்படுத்தினர். ஃபேஷன் ஷோக்களில் புதுமையை புகுத்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை மையப்படுத்தியதாக நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.