இந்தியா

14 வழிகளிலும் மறியல்: டெல்லி நுழைவு வாயிலில் டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் முற்றுகை!

14 வழிகளிலும் மறியல்: டெல்லி நுழைவு வாயிலில் டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் முற்றுகை!

JustinDurai

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், டெல்லி - உத்தரப்பிரதேசத்தை இணைக்கும் அனைத்து சாலைகளையும் முற்றுகையிட்டுள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு ஆகியவற்றுக்கு ஆபத்து உள்ளதாக கூறி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள், டெல்லியில் உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் 27-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையிலும் இதுவரை எந்த வித தீர்வுகளும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் டிராக்டர்களை நிறுத்தி முற்றுகையிடும் போரட்டத்தை விவசாயிகள் கையிலெடுத்துள்ளனர். இதுவரை டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தை இணைக்கும் 6 வழிகளில் மட்டுமே மறியல் செய்த நிலையில், தற்போது மொத்தமுள்ள 14 வழிகளிலும் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மறியலால் காசியாபாத் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் தங்கள் போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருவதால் டெல்லியில் பரபரப்பு தொடர்கிறது.