இந்தியா

டெல்லி: விவசாய தலைவர்களின் உரையை ஆங்கில சப்-டைட்டிலுடன் வெளியிடும் போராட்டக்குழு

டெல்லி: விவசாய தலைவர்களின் உரையை ஆங்கில சப்-டைட்டிலுடன் வெளியிடும் போராட்டக்குழு

JustinDurai

வட இந்திய விவசாயிகளின் போராட்ட எழுச்சியை தென்னிந்தியாவிலும் கொண்டு சேர்க்கும் வகையில் விவசாய தலைவர்களின் உரை ஆங்கில சப்-டைட்டிலுடன் வெளியிடப்படுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரானவை, தங்களை அவை கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால் செல்ல வைத்து விடும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை ஒழிக்கப்பட்டு விடும் என்பது விவசாயிகளின் கருத்து. எனவே டெல்லியில் சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகளை வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் முற்றுகையிட்டு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டம், 90 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. விவசாய அமைப்புகளுடன் அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.  இந்த சட்டங்களை வாபஸ் பெற்றே தீர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்பினரே தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தென் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய அமைப்புகளின் பங்கேற்பு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. இதற்கு மொழி ஒரு தடையாக இருப்பதாக போராட்டக் குழுவினர் கூறுகின்றனர். போராட்டத்தில் உரையாற்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் பஞ்சாபி, இந்தி மொழிகளில் மட்டும் பேசுவதால் போராட்ட எழுச்சியை தென் மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை என போராட்டக்குழுவினர் கருதுகின்றனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு, போராட்டத்தின்போது உரையாற்றும் தலைவர்களின் பேச்சுக்களை ஆங்கில சப்-டைட்டில் உடன் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாய அமைப்புத் தலைவர் ஜக்தார் சிங் பஜ்வா கூறுகையில், ‘’எங்கள் தலைவர்களில் பெரும்பாலோர் தங்கள் உரைகளை இந்தி அல்லது பஞ்சாபியில் வழங்குகிறார்கள். இந்தி அல்லாத மொழி பேசும் மாநிலங்களில் உள்ளவர்கள் இதை புரிந்துகொள்வது உண்மையில் கடினம். எனவே, நாங்கள் இப்போது அனைத்து முக்கியமான உரைகளையும் ஆங்கில சப்-டைட்டில் உடன் வெளியிட்டு வருகிறோம். பெங்காலி, ஒரியா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்க விரும்புகிறோம். ஆனால் இது எளிதான வேலை அல்ல என்பதால் தற்போதைக்கு பொதுவான மொழியில் (ஆங்கிலம்) மொழிபெயர்த்து வழங்குகிறோம். இதற்காக ஒரு ஐடி குழு அமைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் அனைத்து மொழிகளிலும் தலைவர்களின் பேச்சுக்களை மொழிபெயர்த்து வழங்குவோம்’’ என்றார்.