இந்தியா

'டெல்லி சலோ' - போலீஸ் வேனில் தாவிய நவ்தீப்... தடுப்புகளைத் தகர்த்தெறிந்த விவசாயிகள்!

'டெல்லி சலோ' - போலீஸ் வேனில் தாவிய நவ்தீப்... தடுப்புகளைத் தகர்த்தெறிந்த விவசாயிகள்!

webteam

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 'டெல்லி சலோ' போராட்டத்தை அடக்குமுறைகளை மீறி நடத்தி வருகின்றனர் ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 'டெல்லி சாலோ' போராட்டங்களுக்காக டெல்லிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையிலான மோதலின் இரண்டாம் நாள் இது. முதல் நாள் போராட்டத்திலேயே இந்தியாவின் மூலைமுடுக்கிலும் உள்ள மக்களை தங்கள் பக்கம் ஈர்த்தனர் விவசாயிகள்.

ஹரியானா மாநிலம் அம்பாலா வில் ஷாம்பு எல்லைப் பகுதியில் சென்றபோது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் கூட்டத்தை கலைக்கவும், அவர்கள் டெல்லி செல்வதைத் தடுக்கவும் போலீஸார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர்ண புகை குண்டுகளும், தடியடிப் பிரயோகமும் விவசாயிகள் மீது நடத்தப்பட்டது. ஆனால், போலீஸாரின் அத்தனை அடக்குமுறைகளை தகர்த்தெறிந்து போராட்டக் களத்தை நோக்கி நகர்ந்தனர் விவசாயிகள்.

நவ்தீப் சிங் என்னும் 'நாயகன்'!

நேற்றைய போராட்டத்தில் நவ்தீப் சிங் எனும் பட்டதாரி ஒரு இளைஞர் கவனம் ஈர்த்தார். ஷாம்பு எல்லைப் பகுதியில் விவசாயிகளை போலீஸ் தண்ணீர் பீய்ச்சி கலைக்க முயன்றது. அப்போது, அம்பாலாவைச் சேர்ந்த இளம் விவசாயி நவ்தீப் சிங் போலீஸாரின் தடியடிகளைத் தாண்டி, தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனத்தின் மேல் தாவி தண்ணீரை நிறுத்தினார். பட்டதாரியான நவ்தீப் 250 கிராமங்களைச் சேர்ந்த பல விவசாயிகளில் ஒருவர். அவர் தண்ணீர் பீரங்கியை அணைத்தவுடன், பல விவசாயிகள் தங்கள் அணிவகுப்போடு முன்னேறினர். இந்தக் காட்சிகள் நேற்று முழுவதும் இணையத்தில் வைரலாகின.

இவர் மட்டுமல்ல, இன்னும் பலர் போலீஸின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர். ''எந்தவொரு தடுப்பும் எங்களைத் தடுக்க முடியாது. எங்கள் குரல்கள் நாடாளுமன்றத்தை அடைவதை உறுதி செய்வோம்" என்கிறார் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் ஒருவர். சில விவசாயிகள் முன்பே டெல்லிக்கு பயணமாகிவிட்டார்கள். மேலும், அவர்கள் ஆறு மாதங்களுக்கு ரேஷன் கொண்டு சென்றுள்ளனர்.

''நாங்கள் டெல்லியில் ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை இருக்க போதுமான ரேஷனைக் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் அமைதியான போராட்டத்தை நடத்தி வருகிறோம். குருத்வாராக்கள் எங்களுக்கு உணவுப் பொருட்களையும் அனுப்புகிறார்கள்.

அரசு எங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கை. அவர்கள் பண்ணைச் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தச் சட்டத்தின்மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மற்றும் ஆர்தியாஸ் அமைப்பு (இடைத்தரகர்கள் அல்லது சேவை வழங்குநர்கள்) அகற்றப்பட்டால் விவசாயிகள் என்ன செய்வார்கள். எங்கள் போராட்டங்களை நடத்துவதற்கு நாங்கள் உணவுப் பொருட்களை ஏற்பாடு செய்துள்ளோம். குளிரை எதிர்கொள்ள சூடான ஆடைகளையும் ஏற்பாடு செய்துள்ளோம். இரவில் நாங்கள் இங்கு தங்கப் போகிறோம்" என்று கூறியுள்ளனர்.

ஒற்றைக் குறிக்கோள்!

குளிர், மழை என எதையும் பொருட்படுத்தாமல் தங்கள் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர் விவசாயிகள். அவர்கள் குறிப்பிட்டதை போல, ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், தண்ணீர், கம்பளி உள்ளிட்ட பொருட்களை தங்கள் டிராக்டர்களில் ஏற்றி வந்திருந்தனர். ரோட்டிலேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். டெல்லிக்குள் நுழைந்தே ஆக வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் தங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, முதலில் அவர்களை டெல்லிக்குள் நுழைய விடகூடாது என நினைத்த அரசு, தற்போது அவர்களுக்கு போராட அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி, விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என டெல்லி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Found the video. This is called swag se swaagath.

Your tear gas, your lathis, your water canons, your might will be shaken by the resolve of struggling people, toiling masses. All power to the people! #BharatBandh #BharatBand #FarmersDilliChalo #Farmers #FarmerProtest pic.twitter.com/d4HyQyCN7b
— Avantika Tewari (@Avantikatewari) November 26, 2020

''விவசாயிகள் சட்டம் ஒழுங்கை பராமரித்து, அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும்" என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பயணமாகி வருகின்றனர்.

- மலையரசு