மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனினும், சட்டங்களை ரத்து செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் இன்று 50-வது நாளாக நீடிக்கிறது.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரியும், விவசாயிகள் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டன.
இவ்விரு வழக்குகளும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை தொடரும் என தெரிவித்த உச்ச நீதிமன்ற அமர்வு, வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க குழுவையும் அமைத்து ஆணை பிறப்பித்தது.
அந்தக் குழுவில் பாரதிய கிசான் சங்கத் தலைவர் ஜிதேந்தர் சிங்மன், சர்வதேச கொள்கைகள் குழுத் தலைவர் டாக்டர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட், மகாராஷ்டிராவின் அரசியல் சாரா விவசாய அமைப்பின் தலைவர் அனில் தத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு அடுத்த 10 நாட்களுக்குள் தங்களது முதல் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், இரு மாதத்திற்குள் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குழுவின் முன்பாக வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இரு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை முன் வைக்கலாம் என்றும், இந்த குழுவுக்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் 3 சட்டங்களையும் ரத்து செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் கூறுகின்றனர். பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்ட குழு மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் பேச்சுவார்த்தையில் நிச்சயம் கலந்து கொள்வோம் என்றும், மத்திய அரசு அமைத்திருக்கும் குழுவிடம் தங்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைப்போம் என்று விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
வழக்கின் அடுத்த விசாரணை 8 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அப்போதாவது இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.