இந்தியா

உருளைக்கிழங்கு விவகாரம்: விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய குஜராத் அரசு ! கவலையில் பெப்சி நிர்வாகம்

உருளைக்கிழங்கு விவகாரம்: விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய குஜராத் அரசு ! கவலையில் பெப்சி நிர்வாகம்

அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்தவுடன் வாங்க தூண்டும் நொறுக்கு தீனி என்றால் அது "லேஸ் சிப்ஸ்". இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த லேஸ் சிப்ஸ் பாக்கெட்டுகள் எளிதில் கிடைக்கும் என்பதால் இதற்கு டிமாண்ட் அதிகம். இந்த சிப்ஸ்களை தயாரிப்பதற்கு பிரத்யேக உருளைக்கிழங்கை அந்நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. அந்த உருளைக்கிழங்கையும் விவசாயிகளிடமிருந்தே பெற்று வருகிறது. ஆனால், இப்போது அதே விவசாயிகளுக்கு லேஸ் சிப்ஸால் சிக்கல் முளைத்துள்ளது.

பெப்சி நிறுவனம் தயாரித்து வரும் "லேஸ் சிப்ஸ்" தயாரிப்பிற்காக பிரத்தியேக உருளைக்கிழங்கு வகையை பயன்படுத்தி வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்சி நிறுவனம் எப்.எல் 2027 என்ற புது வகை உருளைக்கிழங்கை கண்டறிந்து அதற்கு காப்புரிமை பெற்றது. அதன் பின் லேஸ் சிப்ஸுக்காக இந்த வகை உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய சில விவசாயிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்நிலையில் இந்த வகை உருளைக்கிழங்கின் விதைகளை ஒரு சில விவசாயிகள் காப்புரிமை பற்றி அறியாமல் பயிரிட்டுள்ளனர். இதனையடுத்து லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு பயிரிட்ட குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 4 விவசாயிகளிடம் இருந்து ரூ.1 கோடி கேட்டு அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பெப்ஸி நிறுவனம் விவசாயிகளுக்கு சில கட்டுப்பாடுகளை தெரிவித்துள்ளது. அது இன்னும் அதிர்ச்சியூட்டும் விதமாகவும் விவசாயத்தை அச்சுறுத்தும் வகையிலும் இருக்கிறது. பெப்சி நிறுவன தரப்பில், லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு (FC5) பெப்சி நிறுவனத்தின் காப்புரிமை விதை. அதை மற்றவர்கள் பயிர் செய்ய உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே பயிரிட்ட உருளைக்கிழங்கையும், விதைகளையும் திருப்பி கொடுத்துவிட வேண்டுமென கூறியுள்ளது. 

மேலும் பயிரிட்ட விவசாயிகளிடம் "நீங்கள் எங்களுக்கு பணியாற்றுங்கள். அல்லது வேறு வகையான உருளைக்கிழங்குகளைப் பயிரிடுங்கள்" என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு இந்தியளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குஜராத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெப்சி நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து லேஸ் வகை சிப்ஸ்களை தயாரிப்பதற்கான உருளைக்கிழங்கை பயிரிட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் விவசாயிகள் தரப்போ " பயிர்ப் பன்மைப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001 இன் பிரிவு 64-ஐ இந்த விவசாயிகள் மீறியுள்ளனர் என்கிறது பெப்சி தொடுத்த மனு. இதே சட்டத்தின் பிரிவு 39, விதைகளை சேமித்துப் பயன்படுத்தவும் மறுபயிர் செய்யவும் பரிமாற்றம் செய்யவும், விற்பனை செய்யவும் கூட உரிமை அளிக்கிறது. 2018 இல் தாங்கள் வாங்கிச் சேமித்திருந்த விதையைத்தான் பயன்படுத்தியிருக்கிறோம்; இதனைப் பயிர்ப் பன்மைப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத்துக்கும் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

இதில் முக்கிய திருப்பமாக விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் குறித்து பேசிய அம்மாநில துணை முதல்வர் நிதின் படேல் " விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மாநில அரசும் விவசாயிகளுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக 192 அமைப்புகள் குஜராத்தில் பெப்சி நிறுவனத்துக்கு எதிராக திரும்பியுள்ளது. இதன் காரணமாக பெப்சி நிறுவனம் கலக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பெப்சி நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளது.