இந்தியா

விவசாயிகள் எதிர்ப்பு: நடிகை ஜான்வி கபூரின் படப்பிடிப்பில் சலசலப்பு!

விவசாயிகள் எதிர்ப்பு: நடிகை ஜான்வி கபூரின் படப்பிடிப்பில் சலசலப்பு!

webteam

'குட்லக் ஜெர்ரி' படத்தில் நடிக்கும் ஜான்வி கபூரின் படப்பிடிப்பை விவசாயிகள் நிறுத்தினர். இதையடுத்து, நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி - போனிகபூரின் மகள் ஜான்வி கபூர். இவர் 'தடக்', 'கோஸ்ட் ஸ்டோரிஸ்', 'அங்கிரேஸி மீடியம்', 'குஞ்சன் சக்சேனா' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். அவர் தற்போது, 'குட்லக் ஜெர்ரி' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ஆன்ந்த் ராய் தயாரிக்கிறார். சித்திக் சென்குப்தா இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் பஸ்சி பதானா நகரில் நடைபெற்று வந்தது. அப்பகுதியில் வந்த விவசாயிகள், படப்பிடிப்பை நிறுத்துமாறு கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான விவசாயிகள் கூடியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

அப்போது பேசிய விவசாயிகள், ''மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெறும் இந்தப் போராட்டத்தை பாலிவுட் நட்சித்திரங்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பவுமில்லை' என்று கூறி படப்பிடிப்பு குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், இயக்குநர் சித்திக் சென்குப்தா, விவசாயிகளிடம், 'விவசாயிகளுக்கு ஆதரவாக எங்கள் தரப்பிலிருந்து நடிகை ஜான்வி கபூர் அறிக்கை வெளியிடுவார். நிச்சயம் குரல் கொடுப்போம்' என்று கூறி சமாதானம் செய்துவைத்தார். அவர்கள் கூறிய விளக்கத்தை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தால் 3 மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து ஜான்வி கபூர், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.