இந்தியா

கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தூக்கில் தொங்கிய விவசாயி

கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தூக்கில் தொங்கிய விவசாயி

webteam

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன் விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

செம்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்துக்கு முன்பு நேற்றிரவு 9.30 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்துகொண்டவர் சக்கிடப்பாரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எனவும் அவரது பெயர் கவில்புரையிடத்தில் ஜோய் அல்லது தாமஸ் எனவும் தெரியவந்தது. தனது மனைவி பெயரில் உள்ள நிலத்துக்காக வரி செலுத்த கிராம நிர்வாக அலுவலகத்துக்கு பலமுறை ஜோய் சென்றதாகவும், ஆனால், அவரிடம் அலுவலகத்தில் இருந்தவர்கள் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விவசாயி ஜோய் கிராம நிர்வாக அலுவலகத்தின் முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலகத்தின் உதவியாளர் சிரேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜோயின் மனைவியின் பெயரில் இருந்த அந்த நிலம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் இடையே பிரச்னை இருந்து வந்ததாகவும், இந்த விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகத்தில் ஜோய் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சக்கிடப்பாரா பகுதியில் முழுஅடைப்புக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் யு.வி.ஜோஸ் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.