இந்தியா

“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” -  மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” -  மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

webteam

டெல்லி என்சிஆர் பகுதியில் ஒட்டு மொத்த காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

பனிப்பொழிவு என்றாலும் கடும் குளிர் என்றாலும், மோசமான வெப்பம் என்றாலும் டெல்லிக்கு அதில் தனி இடம் உண்டு. கடந்த சில வருடங்களாகவே காற்று மாசுப்பாட்டினால் டெல்லி நகர மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே கடந்த ஆண்டுகூட டெல்லி தலைநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுக்களை வெடிப்பதற்கும் கட்டுப்பாடுகள் போடப்பட்டன. ஆரம்பத்தில் அதற்கு சில எதிர்ப்புகளும் எழுந்தன. வருங்கால தலைமுறையை பாதுகாக்க வேண்டி இந்தத் தடைகளை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

டெல்லியில் குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில், தலைநகரைச் சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள், விளைச்சலுக்கு பின்னர் வயல்வெளிகளில் உள்ள வைக்கோல் உள்ளிட்ட கழிவுகளை தீ வைத்து எரித்து வருகின்றனர். வேளாண் கழிவுப் புகையால், டெல்லியில் சுவாசிக்கும் காற்றின் தரம் மோசமாகி உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டெல்லியின் வடக்கு மாவட்டமான அலிபுர் பகுதியில் காற்றின் தரமானது 314 ஆக பதிவாகியுள்ளது. இது காற்று தரத்தின் மிக மோசமான குறியீடாகும். டெல்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரம் 299 ஆக பதிவாகியுள்ளது. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை, தூசி, நெகிழி மற்றும் ரப்பர் கழிவுகளை எரிப்பதன் மூலம் காற்று மாசு அதிகம் ஏற்படுவதால் சுற்றுச்சூழல் மோசமடைந்திருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.