இந்தியா

8 மாத குழந்தையை 200 ரூபாய்க்கு விற்ற அவலம்

8 மாத குழந்தையை 200 ரூபாய்க்கு விற்ற அவலம்

webteam

திரிபுரா மாநிலம் டெலியமுரா பகுதியில் வறுமையால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது 8 மாத பெண் குழந்தையை 200 ரூபாய்க்கு விற்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

திரிபுரா மாநிலம் டெலியமுரா பகுதியை சேர்ந்த ஒருவர் வறுமையின் காரணமாக தனது 8 மாத பெண் குழந்தையை 200 ரூபாய்க்கு ஆட்டோ ஓட்டுநருக்கு விற்பனை செய்துள்ளார். குடும்பத்தின் வறுமையை சமாளிக்க வேறு வழி தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். வருவாய் கிடைக்க வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் பலர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் குடும்பம் ஒன்று, வேலை இல்லாத காரணத்தினால் வறுமையில் வாடி வந்துள்ளது. இதனால் அந்த குடும்ப தலைவர் தனது 8 மாத பெண் குழந்தையை 200 ரூபாய்க்காக விற்றுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களால் அதிகம் பேசப்பட்டு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காதுகளுக்கு சென்றுள்ளது. இதுகுறித்து நேரில் விசாரணை செய்த அவர்கள், குடும்பத்தின் ஏழ்மை நிலையை கண்டு திகைத்துள்ளனர். இதுபோன்ற அவலநிலை ஏற்படாத வகையில் எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர அரசாங்கம் உரிய  நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளனர். சமீபத்தில் இதே மாநிலத்தில் கண்டச்சேரா கிராமத்தில் உள்ள பெண் ஒருவர், கணவரின் மருத்துவ செலவுக்காக தனது ஆண் குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.